கொரோனா எதிரொலி – ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல்கள் நிறுத்தி வைப்பு!

கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் வரும் 21, 23 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 6 வாரங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைத்து ஆந்திர தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழக மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

நாட்டின் முக்கிய நகரங்களில் திரையரங்குகள், மால்கள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையிலும் அதனையும் மீறி கொரோனா வைரஸ் பரவி வருவது இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.