அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா உதவி மையம் செயல்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்கத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற காஞ்சிபுரம் பொறியாளர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் என கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என்றும் அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 31 படுக்கை வசதி கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை என எச்சரித்துள்ளார்.

தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது, மார்ச் 31ம் தேதிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்பது அரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் பாதிப்புடன் வருவோரின் சந்தேகத்தை போக்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் உதவி மையம் செயல்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.