சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 16 பேர் உட்பட 3 காவலர்களுக்கு இன்று கொரோனா உறுதி!!

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை முகாமில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பும் பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த பணிகளில் ரயில்வே அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 16 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல, சென்னை கிரீன்வேஸ் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 3 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *