கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்பாடி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் டயர் கடையில் இருசக்கர வாகன டயர் ஒன்றை வாங்கினார். அதன் மதிப்பு 1060 ரூபாய் ஆகும். இந்நிலையில் வாங்கிய 53 நாட்களில் டயர் வெடித்து சேதமானதால் மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கண்ணனுக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. இதனால் புதிய டயர் மாற்றி தருமாறும், பாதிப்பிற்கு இழப்பீடு தருமாறும் கடைக்காரரிடம் கண்ணன் கேட்டுள்ளார்.
ஆனால் கடைக்காரர் புதிய டயரை கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் கண்ணன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 7,500 ரூபாய் அபராதம், டயருக்கு செலுத்திய தொகை 1060, வழக்கு செலவு தொகை 2500 என மொத்தம் 11,060 ரூபாய் பணத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.