ஆஸ்கர் வென்ற ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ ஆவணப் பட இயக்குநர்களைப் பாராட்டிய ஒபாமா

‘அமெரிக்கன் ஃபேக்டரி’ என்ற பெயரில் தனது முதல் தயாரிப்பில், வெளியான ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதால், அதன் இயக்குநர்களுக்குப் பாராட்டு தெரிவித்து ‘திறமையானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்களை ஆஸ்கர் விருது வென்றதற்காகப் பாராட்டியுள்ளார்.

‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்கள் ஸ்டீவன் பொக்னர், ஜூலியா ரிச்சர்ட் ஆகியோரை ட்விட்டரில் பாராட்டி ஒபாமா கூறியிருப்பதாவது,’அமெரிக்கன் ஃபேக்டரி’ என்ற பெயரில், பொருளாதார மாற்றத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றிய சிக்கலான கதைக்குப் பின்புலமாக இருந்து எடுத்துரைத்த இயக்குநர்கள் ஜூலியா மற்றும் ஸ்டீவனுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

திறமையான, வெளிப்படை மிக்க அந்த இருவரும் எனது முதல் தயாரிப்பில் ரிலீஸான படத்துக்கு ஆஸ்கர் என்ற உயரிய பட்டத்தை பெற்றுத் தந்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ குறித்து நெட் பிளிக்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்விட்டை, ரீ – ட்விட் செய்துள்ளார். நெட்பிளிக்ஸ் பதிவிட்டுள்ள ட்விட் பதிவில், ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ உணர்வுப்பூர்வமிக்க உள்ளூர் கதையைக் கூறினாலும்; உலக அளவில் எதிரொலிக்கும் விதமாக உள்ளது.

கலாசாரம், தொழிலாளர்களின் பிரச்னை, வர்க்கப் போராட்டம், தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கப்படுவதில் இருக்கும் சவால்கள் போன்ற அம்சங்களுடன் சிறந்த படைப்பை இயக்குநர்கள் ஸ்டீவன் பொக்னர், ஜூலியா ரிச்சர்ட் ஆகியோர் தந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோருக்குச் சொந்தமான ஹையர் கிரவுண்ட் புரொடக்‌ஷனின் முதல் படமாக ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ உருவாகியுள்ளது. ஓஹியோ மாகாணத்திலுள்ள நகரம் ஒன்றில் அமைந்திருக்கும் மூடப்பட்ட சீனத் தொழிற்சாலை பற்றிய ஆவணப்படமாக ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ திரைப்படம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *