“இனிமேல் கஞ்சா புகைக்க மாட்டோம்” கவுன்சிலிங் வழங்கிய அதிகாரிகள்…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு….!!!

கஞ்சா பயன்படுத்திய 8 மாணவர்களுக்கு காவல்துறையினர் கவுன்சிலிங் வழங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்திற்கு சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஆந்திர மாநிலத்தின் எல்லை அமைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியிலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு குடியாத்தம் பகுதிகளில் வசித்து வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அடிமையாகி பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வெளியூரிலிருந்து கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர கஞ்சா விற்பனை தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உட்பட 10 -க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கஞ்சாவிற்கு அடிமையாகியுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குமாறு போலீஸ் சூப்பிரண்டு குடியாத்தம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி குடியாத்தம் பகுதியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 8 தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து இதுபற்றி அந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாலிடெக்னிக் கல்வி துறை தலைவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு காவல்துறையினர் கவுன்சிலிங் வழங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து மாணவர்கள் இனிமேல் கஞ்சா பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *