கல்லூரி மாணவி அடித்துக் கொலை – காதலன் வெறிச்செயல்… காரைக்குடியில் பரபரப்பு சம்பவம் ..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளியான இவரது இளைய மகள் சினேகா, வயது 21. நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதியம் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம் பெண் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடுவதாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிய வர, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல் துறையினரும், ஊர் மக்களும் சேர்ந்து தலையில் பலத்த காயமடைந்த பெண்ணை பார்க்கும் பொழுது, அது சினேகா என தெரியவந்தது. விசாரணையில் சினேகாவும் அவரது ஊரருகே உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சினேகா அக்காவுக்கு திருமணமாகாமல் இருப்பதால் அக்கா திருமணம் முடிந்த பிறகு உங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கிறோம் என சினேகா வீட்டு தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்கக் கோரி நேரடியாக வீட்டுக்கே வந்து கண்ணன் தகராறு செய்ததாகவும், இதில் சினேகாவின் தாத்தாவை கண்ணன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதிலிருந்து சினேகாவுக்கும், கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு போனில் அழைத்துள்ளார்.

இந்த சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு சினேகா தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மாத்தூர் ரேஷன் கடை அருகே வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, கண்ணன் மறைத்து வைத்திருந்த இரும்பு கரும்பியால் சினேகாவின் தலையில் ஓங்கி அடித்துளதாக தெரிகின்றது.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை கண்ட கண்ணன் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இது சிறிது நேரத்திலேயே சினேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.