உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா… பல்வேறு வீரியமிக்க ரகங்கள்… கலெக்டரின் புகழாரம்…!!

ஊட்டி அரசு ரோஜா பூங்கா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிக அளவு புதிய ரகங்களை கொண்ட ரோஜாவை பராமரித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறது என கலெக்டர் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை துவங்கி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் உள்ள 31,500 வீரிய ரக ரோஜா செடிகளில் கவாத்து பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊட்டி மலர் காட்சியின் நூறாவது ஆண்டு நினைவாக 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ரோஜா பூங்கா தோட்டக்கலை துறையின் மூலம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். இங்கு நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இதனையடுத்து அரசு ரோஜா பூங்காவிற்கு, உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதினை கடந்த 2006ஆம் ஆண்டு உலக ரோஜா சங்க சம்மேளனம் வழங்கியுள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக இது திகழ்வதால் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் இது பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளில் ரோஜா மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என அவர் கூறியுள்ளார்.