ஆலயத்தின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் பிரசித்தி பெற்ற புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள சகாயமாதா சிலையின் கீழ் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்தவுடன் நிர்வாகிகள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். பின்னர் காலையில் வந்து பார்க்கும் போது ஆலயத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் பெண்ணாடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.