முதல்வர் பழனிசாமி தனது 13 நாள் பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 40 மணி அளவில் சென்னை திரும்புகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குசென்றுள்ளார். இதற்காக அவர் கடந்த மாதம் 28ஆம் தேதி பயணத்தை தொடங்கி முதலில் இங்கிலாந்துக்கும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.
அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு கூறி அதற்குரிய சாதகமான சூழலை எடுத்துரைத்த முதல்வர் பழனிசாமி அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் முதல்வர் பழனிசாமி பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களையும் பார்வையிட்டு அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இறுதி பயணமாக துபாய் சென்ற முதல்வர் பழனிசாமிக்கு அங்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இன்று அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். இதையடுத்து முதல்வர் தனது 13 நாள் பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 40 மணி அளவில் சென்னை திரும்ப இருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.