தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

முதல்வர் பழனிசாமி, சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்  

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசினார்.பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து பேசினார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பழனி சாமி கலந்து கொண்டார்.

பின்னர் டெல்லியில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆணையத்தின் மூலமே காவிரி நீரை பெற முடியும். கர்நாடக முதல்வரை தனித்து சந்தித்தால் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்றார். மேலும் சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.