பிற கட்சியினருடன் பழகக்கூடிய பண்பாளர் அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் கடந்த செவாய்க்கிழமை, எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை.
இதனிடையே மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து வந்தனர். அதை தொடர்ந்து நேற்று இரவிலிருந்தே அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமாக இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி – 24.8.2019 #ArunJaitely pic.twitter.com/jpzpPSY9pQ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 24, 2019
திரு அருண் ஜெட்லி அவர்களின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கும் மட்டுமில்லாமல் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் இந்திய நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.