இன்றைய அனல் பறக்கும் போட்டி : சென்னை vs பஞ்சாப் அணிகள் மோதல்….

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியும் மோதுகின்றன.  

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று நடக்கும் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. சென்னை அணி   3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், தோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடு, சேன் வாட்சன் ஃபார்மில் இல்லாததால் சென்னை அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த 4 போட்டிகளில் அம்பத்தி ராயுடு எடுத்த ரன்கள், 28, 5, 1, 0. சேன் வாட்சன் எடுத்த ரன்கள் 0,44, 13, 5. இதன் காரணமாக  இன்று நடைபெறவுள்ள   போட்டியில் ராயுடுவுக்கு பதிலாக தமிழக வீரர் முரளி விஜய்-க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கணிக்கப்படுகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தின் போது  காயமடைந்த ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, 2 வாரம் விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்கள் லுங்கி நிகிடி காயம் காரணமாகவும், டேவிட் வில்லே சொந்த காரணத்திற்க்காகவும் விலகிய நிலையில்  பிராவோவும் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லுங்கி நிகிடிக்கு பதிலாக  நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் கஜ்ஜலின் சேர்க்கப்பட்டுள்ளார்.  இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவார் என்று தெரிகிறது. தமிழக வீரர் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நடைபெற்ற 4 ஆட்டங்களில் விளையாடி  3 வெற்றியும் , ஒரு தோல்வியும்  அடைந்துள்ளது. கடந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான  கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக விளையாடவில்லை . அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் முருகன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் ஆல்-ரவுண்டரான சாம் கர்ரன் கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இன்றைய போட்டியிலும் அவர் சவாலாக இருப்பார். கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர் போன்ற  அதிரடி பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ளூர் வீரர் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் உள்ளூர் வீரராக மாறியுள்ள தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில்  அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இரண்டு  அணிகளும் இதுவரையில்  19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 11 ஆட்டங்களிலும் , பஞ்சாப் அணி 8 ஆட்டங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது. ஹைதெராபாத்தில் இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும்  மோதுகின்றன.