டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!!

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது 

2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு 7 : 30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான  பிருத்வி ஷா 5 ரன்னிலும், ஷிகர் தவான்  18 ரன்னிலும்  வெளியேறினர்.

Image

இதையடுத்து வந்த கோலின் மன்ரோவும் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்    பார்ட்னர்ஷிப் இல்லாமல் டெல்லி அணி தடுமாறியது.  இருந்த போதிலும் ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடி 38 (25) ரன்கள் சேர்த்தார். இறுதியில்   ஜடேஜா வீசிய கடைசி ஓவரில்  இஷாந் சர்மா கடைசி 2 பந்தில் அதிரடியாக  4,6 அடிக்க இறுதியில் டெல்லி அணி 9 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Image

இதையடுத்து  148 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டு பிளெஸிஸும், சேன் வாட்சனும் களமிறங்கினர். தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய டு பிளெஸிஸ் பின் அதிரடியாக விளையாடினார்.  வாட்சன் ஒருபுறம் அவருக்கு கம்பேனி கொடுத்தார். அதன் பிறகு வாட்சனும் அதிரடி ஆட்டம் ஆட ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அதன் பின் அதிரடியாக விளையாடிய டு பிளெஸிஸ் அரைசதம் விளாசி  39 பந்துகளில் 50 ரன்கள் 7 பவுண்டரி 1 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Image

அதை தொடர்ந்து அரைசதம் கடந்த வாட்சனும் 32 பந்துகளில் 50 ரன்கள் (4 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ரெய்னா 11 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு  அம்பத்தி ராயுடுவும், தோனியும்  பொறுப்புடன் விளையாடினர். இஷாந் சர்மா வீசிய 19 வது ஓவரில் வெற்றியின் விளிம்பில் தோனி 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பிராவோ பவுண்டரி மூலம் வெற்றியை வசமாக்கினார்.

Image

ராயுடு 20 ரன்னிலும், பிராவோ 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இறுதியில் சென்னை அணி 19 ஓவரில்  4 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வென்றது. டெல்லி அணியில் ட்ரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா, அக்சர் பட்டேல் அமித் மிஸ்ரா  ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர். சென்னை அணி இறுதி போட்டியில் மும்பை அணியை ஹைதராபாத்தில் நாளை சந்திக்கிறது.