பலம் வாய்ந்த சென்னை அணியை வீழ்த்துமா ராஜஸ்தான்…!!

ஐ.பி.எல்லில்  இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 24வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. சென்னை அணி இத்தொடரில் விளையாடிய6 போட்டிகளில் 5 வெற்றியும் 1 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சென்னை அணியில் வெற்றிக்கு முக்கியப்பங்கு  ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய  சுழற்பந்து வீச்சாளர்களே காரணம். வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர் அசத்தி வருகிறார். பேட்டிங்கிலும் கடந்த 2 போட்டியில் களமிறங்கிய பாப் டுப்லெஸி சிறப்பான துவக்கம் கொடுக்கிறார். மேலும் ரெய்னா, கேதார் ஜாதவ், தோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ராயுடு, வாட்சன், ஆகியோர் பார்முக்கு திரும்பினால் கூடுதல் பலம்.

ராஜஸ்தான் அணி இத்தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வியும், 1 வெற்றியும் பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் சரியாக சோபிக்காததால் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. ஜாஸ் பட்லர், ஸ்மித் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பென் ஸ்டோக்ஸ், த்ருப்பாதி, ஆகியோர் அதிரடி காட்டினால் இன்னும் அணிக்கு பலம் சேர்க்கும். பந்து வீச்சில் ஷ்ரேயஸ் கோபால், ஜோப்ரா ஆர்ச்சர், ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொதப்புகின்றனர்.

ஏற்கனவே நடந்த போட்டியில் சென்னை அணியிடம் வீழ்ந்த ராஜஸ்தான் இன்றைய ஆட்டத்தில் ஒட்டுமொத்த கூட்டு பலத்துடன் செயல்பட்டால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும். தொடர் வெற்றியை நோக்கி சென்னை அணியும், வெற்றி பெ வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணியும் களம் காண்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 13 வெற்றியும், ராஜஸ்தான் அணி 7 வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.