“சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்” – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

 சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 3 பேரும் அடக்கம். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் நாளை (22 ஆம் தேதி) சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் யாரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். அதன்படி, முதல்வர் பழனிசாமி பிரதமரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் நாளை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவித்தார்.

இதனால் தமிழகத்தில் நாளை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.