சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர்.

இதனை தொடர்ந்து சரியாக 2.43 மணி அளவில் GSLV மார்க்-3 ராக்கெட் சந்திராயன்-2 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிகழ்வு குறித்து பல்வேறு தரப்பினர் கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்றும் நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள சந்திரயான்-2 விண்கலம் தனித்தன்மை வாய்ந்தது இதன் மூலம் நிலவை பற்றிய புதிய தகவலை அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்த அவர், அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளை படிக்கும், மாணவர்களுக்கு சந்திராயன்-2 வின் வெற்றி ஊக்கத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் மொத்த இந்தியாவின் சார்பாக உழைத்த அத்தனை விஞ்ஞானிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.