மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. பெண்ணிடம் நகை பறித்த 8 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை தெக்கூர் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் முத்து மற்றும் வசந்தா சென்ற மோட்டார் சைக்கிளை விரட்டி சென்றனர். அதில் ஒருவர் வசந்தாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட வசந்தா சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் ஒரு பகுதி மட்டும் மர்ம நபரின் கையில் சிக்கியது. இதற்கிடையே வசந்தா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் நாகர்கோவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 8 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.