நூதன முறையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்- சுமித்ரா தம்பதியினர் கரூரிலுள்ள கைலாச புரத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இதில் கல்குவாரியில் பொக்லின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் ராஜேஷ் வழக்கம் போல பணிக்கு சென்று விட்ட நிலையில் சுமித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தங்களை ஜோதிடர் என்று கூறியதோடு ஜோதிடம் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு சுமித்ரா நான் ஜோதிடம் பார்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் 2 பேரில் ஒருவர் தான் கொண்டு வந்த மயக்க மருந்தை அந்த பெண்ணின் முகத்தில் அடித்து உள்ளார். இதனையடுத்து சுமித்ரா மயக்கமடைந்த உடன் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து ராஜேஷ் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சுமித்ராவிடம் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.