துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் இச்செயல்கள் மாநில அரசின் அதிகாரங்களில் நேரடியாக தலையிடுவதற்கு சமம் என்றும், இம்மாதிரியான செயல்கள் மோதலை ஏற்படுத்தக் கூடும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடவோ, உத்தரவுகளை பிறப்பிக்கவோ துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதற்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும், மத்திய உள்துறை அமைச்சகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக எந்த தடையும் விதிக்க முடியாது என்று கூறி துணைநிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான கிரண்பேடி வழக்கையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்தார்.