“குற்றத்தில் அனைவருக்கும் சம பங்குள்ளது” பெண் மருத்துவர் தாக்கல் செய்த மனு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா கடந்த 2013ஆம் ஆண்டு இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நள்ளிரவு மூன்று மணி அளவில் அன்பு சூர்யா மெரினா கடற்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு மீன் வியாபாரிகள் மற்றும் ஒரு தலைமை காவலர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக அன்பு சூர்யா மீதும் அவர்களுடன் காரில் பயணம் செய்த அவரது மூத்த சகோதரி மருத்துவர் லட்சுமி மற்றும் நண்பர் செபஸ்டியன், கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீதும் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் காரை ஓட்டாமல் அன்பு சூர்யாவுடன் பயணம் மட்டுமே செய்த மருத்துவர் லட்சுமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவ்வாறு நிராகரிக்கப்பட்ட உத்தரவை மறு பரிசீலனை செய்து தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது “தன்னுடைய சகோதரர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும் வாகனம் ஓட்டுவதை தடுக்காமல் ஊக்குவித்த குற்றத்திற்காக மருத்துவர் லட்சுமி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் “குடிபோதையில் கார் ஓட்டியதால் இந்த விபத்து நடத்துள்ளது. இந்த குற்றத்தில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் அவருடன் பயணம் செய்த அனைவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அதனால் மருத்துவர் லட்சுமியை வழக்கிலிருந்து விடுவிக்க எந்த வித தகுதியும் இல்லை. எனவே மருத்துவர் லட்சுமியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கிறது” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *