இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பொது மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் 2 ஓட்டுனர்களுக்கு இடையே நடந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபர் அவரின் முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயற்சி செய்தார்.

ஆனால் அந்தக் காரின் ஓட்டுனர் வழி விடவில்லை. இதனால் கோபமடைந்த இருசக்கர வாகனத்தின் ஓட்டுநர் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்றார். அப்போது கார் சிக்னலில் நின்றது. உடனே அந்த இருசக்கர வாகன ஓட்டி தனது வாகனத்தை காரின் முன் நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று அந்த கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கிரீன் சிக்னல் வந்த பிறகும் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அந்த கார் ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.