கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை கேன் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது கொரோனா வைரஸின் தாக்கம் உலக போரை விட அதிகமாக உள்ளது. இதையடுத்து வரும் 22ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை ஏற்று நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பொது போக்குவரத்து, ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் மதுபான கடைகளும் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பஸ்கள், ரயில்கள் இயங்காது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.