2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்கம் நாளும் நாள் அதிகரித்து வருகிறது. வரும் 22ம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பையடுத்து ஒடிஷா, சத்தீஸ்கர் சட்டபேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு யாரும் வரவேண்டாம் என பலகை வைத்துள்ளார். அமைச்சருக்கே கொரோனா அச்சம் உள்ள போது, நாம் ஒன்று கூடி விவாதிப்பது சரியா? என்று கேட்டுள்ளார் .
அமைச்சர் செங்கோட்டையன் தன் வீட்டிற்கு முன் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என நோட்டிஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சிறு, குறு தொழிலாளர்களுக்கு இந்த மாத சம்பளத்தை நிறுத்தாமல் வழங்க வேண்டும், கேரளாவை போன்று, ரேஷன் பொருட்களை வீட்டிற்கே நேரில் சென்று வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.