பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அருகே இம்மடி பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கிராம மக்கள் இம்மடிபாளையத்திலிருந்து கிணத்துக்கடவு செல்ல காலை 8 மணி, மதியம் 2.30 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே பஸ் வசதி உள்ளது. மேலும் காலை 8 மணிக்கு கிணத்துக்கடவு, கோவை ஆகிய பகுதிகளில் படிக்கும் மாணவ -மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்ல பேருந்து வசதி இல்லை. மேலும் 4.15 மணிக்கு பள்ளிக்கூடம் விடும் பொழுது கிணத்துக்கடவிலிருந்து இம்மடிப் பாளையத்திற்கு செல்ல மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லை.
இதனையடுத்து மாலை 6 மணிக்கு வரும் பேருந்திற்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் ஒரு சில மாணவர்கள் ஆட்டோ பிடித்து தங்களது வீட்டிற்கு செல்கின்றனர் பலர் கிணத்துக்கடவில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி லக்ஷ்மி நகர் பிரிவில் இறங்கி 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி புத்தகப் பைகளை சுமந்து கொண்டு கால் கடுக்க மாணவ-மாணவிகள் தங்களது கிராமத்திற்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் உடனே வீட்டிற்கு திரும்பும் வகையில் பேருந்துகள் இயக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.