கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் வசதி வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் மதியனூர், ஆரியநந்தா, நயினார் குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அரசு பேருந்துகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிராமங்களிலிருந்து உளுந்தூர்பேட்டை நகருக்கு வந்து செல்லும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட்டம் அலை மோதுவதால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான வகையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளிக்கு வந்து மீண்டும் வீடு செல்கின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தும் வருகின்றனர். அதுமட்டுமல்லாது கிராமப்புறங்களிலிருந்து உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு செல்ல குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து அதிகாரிகள் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.