நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்து வருகிறார்.

வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் மூன்று திட்டங்கள் அறிமுகம். முதல் திட்டத்தின் படி முதல்முறையாக வேலையில் சேர்ப்பவர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். 20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் ஆயிரம் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி பயில 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக 1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.