அரியலூர் அருகே நிலத்தகராறில் தனது தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பவரும் இவரது சகோதரர் ராமலிங்கம் (வயது 46) என்பவரும் விவசாயிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்து வந்த நிலையில், ராமலிங்கம் அந்த நிலத்தை தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பிரித்து கொடுக்க மறுத்ததால் அடிக்கடி இருவருக்கிமிடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயலில் விவசாய வேலைகளை முடித்து விட்டு ராமலிங்கம் நேற்றிரவு செம்போடை பகுதியில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அங்கு மறைந்திருந்த கோவிந்தராஜூம் அவரது நண்பர் வெங்கடேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, ராமலிங்கத்தை உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கி, அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் . ராமலிங்கம் பலத்த வெட்டுக்காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் டி.எஸ்.பி. இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த அரியலூர் போலீசார் விசாரணை நடத்தியதில் கோவிந்தராஜ், வெங்கடேஸ் இருவரும் சேர்ந்து ராமலிங்கத்தை கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் பகுதியில் தம்பியை அண்ணனே வெட்டிக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.