நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனக்கு கட்சியில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். அதோடு கட்சியில் இருப்பவர்கள் தன்னிடம் கேள்வி கேட்கக் கூடாது எனவும் தன்னுடைய இஷ்டப்படி தான் செயல்படுவேன் எனவும் சீமான் கூறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக சுகுமார் அறிவித்துள்ளார். கடந்த 9 வருடங்களாக கட்சிக்காக என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து விதமான பணிகளையும் சிறப்பாக செய்து வந்தேன் எனவும் ஆனால் எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை சீமானால் தர முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.