டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து, டாடா அறக்கட்டளையின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றிய அவரது இடத்திற்கு நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் டாடா அறக்கட்டளையின் நிர்வாக குழுவால் ஒருமனதாக நடைபெற்றுள்ளது.
நோயல் டாடா, ரத்தன் டாடாவின் சகோதரராக இருப்பதுடன், டாடா குழுமத்தில் பல முக்கியமான பதவிகளை வகித்துள்ளார். அவர், டிரென்ட் நிறுவனம், டாட்டா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவராகவும், டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இதனால், அவரது அனுபவம் டாடா அறக்கட்டளைக்கு ஒரு புதிய தலைமுறையை கொண்டு வரக்கூடியது என கருதப்படுகிறது.
டாடா அறக்கட்டளைகள், இந்தியாவில் முக்கியமான சில தொண்டுப் பணிகளை முன்னெடுக்கும் அமைப்பாக விளங்குகின்றது. 2022-23ஆம் ஆண்டில் மட்டும் 456 கோடி ரூபாயை பல்வேறு சமூகப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.