Breaking: ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு – பரபரப்பான அரசியல் சூழல்

துறைவாரியாக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தயார் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

கிண்டியில் இருக்கும் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.  இது எதற்காக என்று கவர்னர் மாளிகை வட்டாரங்களில் கூறும்போது,  துறைவாரியாக தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஒன்றை திமுக தயார் செய்து இருப்பதாகவும் அது குறித்து புகார் அளிப்பதற்காக சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக பாரத் நெட் என்ற திட்டத்தை தொடங்க கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் அளவில் டெண்டர் விடப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதேபோன்று கொரோனா காலத்தில் 9,000 கோடி ரூபாய் தமிழக அரசு செலவு செய்திருப்பதாகவும், அதில் முக கவசம் கொள்முதல் செய்தது போன்றவற்றில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இது குறித்து விசாரிக்க கோரி தமிழக அரசுக்கு நிர்வாக ரீதியான தலைவர் கவர்னர் என்ற அடிப்படையில் இந்த புகார் மனுவை திமுக கொடுக்கச் சென்றுள்ளனர்.

அதேபோன்று உள்ளாட்சித் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நெடுஞ்சாலைத்துறை என ஒவ்வொரு துறை வாரியாக புகார் அளிக்க இந்த சந்திப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 24ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கவர்னரை திமுக தலைவர் சந்தித்து பேசினார்.

கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு உள்ளது பன்வாரிலால் பதவியேற்று இந்த மூன்று வருட காலத்தில் 10 க்கும் மேற்பட்ட முறை இதுபோன்ற சந்திப்புகள் நடந்திருந்தாலும் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் தற்போதைய இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.