வருகின்ற 7_ஆம் தேதி பாஜக தனது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜக, வருகின்ற 7_ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் (2014), இதே நாளில் தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. எனவே, அந்த தேதியை இந்த முறையும் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு, புதிய திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறன்து.