பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் மீரா மிதுன் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவருக்கும்,பிக்பாஸ் போட்டியாளரும்,நடிகையுமான மீரா மிதுனிற்கும் இடையே பணம் கொடுக்கல்,வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஞ்சிதா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனிடம் சம்மன் அளித்துள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராகவில்லையெனில் குற்றம் சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளதால் வெளியில் வர முடியாது ஆகையால், நிகழ்ச்சி முடிந்த பின் விசாரணைக்கு ஆஜராவதாக மீரா மிதுன் தெரிவித்ததாக காவல்துறையினர் சார்பில் கூறப்படுகிறது. . மேலும் இதற்கு முன்பாக நடிகை வனிதாவின் மகள் தாயுடன் இருப்பதா?அல்லது தந்தையுடன் இருப்பதா? என்ற வழக்கை விசாரிக்க காவல்துறையினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.