சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் தன்னை பொதுச் செயலாளர் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றமும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கில் தெரிவித்திருந்தது. நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணை வர இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த பதில் மனுவில் தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை இதுவரை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமியை பொது செயலாளராக அங்கீகரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.