டக் அவுட்டில் முதலிடத்தைப் பிடித்த பாக். பேட்ஸ்மேன்…!

டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு டி20 போட்டியில் களமிறங்கிய அவர் சிறப்பாக விளையாடுவார் என பாகிஸ்தான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இலங்கை அணி இப்போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலாவது உமர் அக்மல் ஃபார்முக்கு திரும்பார் என்று எதிர்பார்த்தால், அவர் மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட்டானார்.

183 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியில், ஐந்தாவது வரிசையில் களமிரங்கிய உமர் அக்மல் ரன் ஏதும் எடுக்காமல், வானின்டு ஹசரங்கா பந்துவீச்சில் பெவிலியனுக்குத் திரும்பினார். இந்தப் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை பாகிஸ்தான் மண்ணில் வென்று அசத்தியது.

இப்போட்டியில் உமர் அக்மல் டக் அவுட் ஆனதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ஷானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அணியில் திரும்பிய அவர் தற்போது இதுபோன்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழ்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் லுக் ரைட் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் விவரம்:

  1. தில்ஷான் (இலங்கை) – 10 முறை
  2. உமர் அக்மல் (பாகிஸ்தான்) – 10 முறை
  3. லுக் ரைட் (இங்கிலாந்து) – 9 முறை
  4. கேவின் – ஒ பிரேய்ன் (அயர்லாந்து) – 9 முறை
  5. பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) – 8 முறை

பாகிஸ்தான் அணிக்காக 84 டி20 போட்டிகளில் விளையாடிய உமர் அக்மல், இதுவரை 1690 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நாளை லாகூரில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *