அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – காளைகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

பொங்கல் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நெரிசல் இன்றி நிற்பதற்கு போதுமான ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்துள்ளது.

மதுரை மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் காளைகள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை செய்துள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காளைகள் நெரிசல் இன்றி செல்வதற்கும் காளைகள் கூடுவதற்கும் அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பு வரை 11 பிரிவுகளாக பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்றாம் பிரிவிலிருந்து எட்டாம் பிரிவுவரை, ஒன்று முதல் 400 வரை தலா 50 காளைகள் வீதமும்; ஒன்பதாம் பிரிவிலிருந்து 11ஆம் பிரிவு வரை 401 முதல் 700 வரை தலா 100 காளைகள் வீதமும் கூடுவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, வெளியூரிலிருந்து மதுரை மாநகருக்குள் வரும் காளைகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சாலை வழியாக முத்துப்பட்டி சாலை சந்திப்புவரை வாகனத்தில் வந்து காளைகளை இறக்கி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணின் படி சம்பந்தப்பட்ட பிரிவில் காளைகளை நிறுத்திக்கொண்டு, வாகனங்களை முத்துப்பட்டி சந்திப்பிலிருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் மற்றும் வெள்ளைக்கல் ஏரியாக்களிலும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காளையின் உரிமையாளர்கள் காவல் துறையின் வேண்டுகோளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு” அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *