அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல… அதான் இப்படி பண்ணுறோம்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பாதையை ஆக்கிரமித்து கட்டிய கடையை  பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள முத்தனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் ஒருவர் டீ மற்றும் காய்கறி கடைகளை வைத்து விற்பனை செய்து வந்தார். இதனால் அப்பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அந்த கடையின்  உரிமையாளரிடம்  அங்கு கடை வைக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த கடையின் உரிமையாளர் அதனை ஏற்காமல் மீண்டும் அதே பகுதியில் கடையை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.  எனவே பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம்  புகார் கொடுத்தும் அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் கிராம தலைவரின் மகனான வேல்முருகனை கடையின் உரிமையாளர் தாக்கி விட்டார். இது குறித்து வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த கடையை அகற்ற வேண்டும் என பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டினை முன் வைத்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலபேர் அந்த காய்கறி மற்றும் டீ கடையை அடித்து நொறுக்கி விட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் அந்த கடை இந்த இடத்தில் செயல்படக்கூடாது என்று பலமுறை புகார் தெரிவித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் இனிமேல் அந்த இடத்தில் இந்தக் கடைகள் செயல்படாத படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *