விளக்கு வெளிச்சம் தானே பட்டது…. அதற்கெல்லாம் கொலையா….? ஆட்டோ ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்….!!

ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுனரை வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இசக்கிதுரை -சொர்ணமதி . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இசக்கிதுரை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில்  அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகராஜ்  என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் . அப்போது ஆட்டோவின்  விளக்கு வெளிச்சம் சண்முகராஜின்  முகத்தில் பட்டுள்ளது .

இதனால் அவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இசக்கித்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை  பார்த்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை சண்முகராஜ்  மின்வாரிய அலுவலகம் அருகே இசக்கி துரையை  பேச அழைத்துள்ளார்.  இதனால் அவரை நம்பி இசக்கிதுரை  அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும்  இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இசக்கிதுரையை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் கை, கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இசக்கிதுரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் . கொலையை செய்து விட்டு சண்முகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளியான சண்முகராஜை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *