ஜம்முவில் தாக்குதல்….. 250 பயங்கரவாதிகள்….. 30 முகாம்கள்…. உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர்.

உலக நாடுகளில் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத நிலையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கையில் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்முவில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா , ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதாக உளவுத்துறை அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. இதற்காக  சுமார் 250 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ உள்ளதாகவும் , இதற்காக கட்டுப்பாட்டு கோடு அருகே 30 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.