திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 வெளிமாநிலங்களில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது கொள்ளையர்களை நெருங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பணியில் மெத்தனமாக இருந்ததாக காவலர்கள் 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, தி.மலை உதவி ஆய்வாளர் மோகன், காவலர் வரதராஜ், போளூரை சேர்ந்த உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, காவலர் சுதாகர், கலசபாக்கத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் பலராமன் ஆகியோரை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி ஐஜி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.