ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்- இ -துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இத்திருமண விழாவுக்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு வந்திருந்தனர். விழா நடைபெற்று கொண்டிருந்த போது உடல் முழுவதும் குண்டுகளை சுற்றி அணிந்து இருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார்.

இதில் பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த்த பலர் உடல் சிதறி கோரமான முறையில் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். சிலபேர் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தற்கொலை தாக்குதலில் 40 பேர் பலியானதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரையில் இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.