இந்தியா முழுவதும் இனி ஒரே சாதி தான் என்ற சட்டத்தை பாஜக கொண்டுவர தயாராக இருக்கிறதா? என திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.

இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கீ.வீரமணி, கலைஞர் எதிர்நீச்சல் அடித்துதான் வெற்றி பெற்றார். குறிப்பாக நெருக்கடி காலத்தில் கலைஞர் கருணாநிதி வாள் முனையை விட வேகமாக பேனாவை சுழற்றி எதிர் நீச்சல் அடித்து தான் வெற்றிபெற்றார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் மாநிலங்களை இருக்கக்கூடாது ஒற்றையாட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கும் பாஜக இனி இந்தியாவில் ஒரே சாதி தான் என்ற சட்டத்தை இயற்ற முடியுமா? அதற்கு மத்திய பாஜக அரசு தயாராக இருக்கிறதா? என்று கி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.