நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருப்பூண்டியில் ஜன்னத் என்பவர் வசித்து வந்தார். இவர் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் திருப்பூண்டி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஸ்ராம் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
இதனை கேட்ட புவனேஸ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும். பணியின் போது எதற்கு ஹிஜாப் அணிந்துள்ளீர்கள்? நீங்கள் மருத்துவர்தானா? என்று சந்தேகம் இருக்கிறது. ஹிஜாபை கழற்றுங்கள் என கூறி தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கம்யூனஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, ம.ஜ.க,ம.ம.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து தலைமையில் மருத்துவமனை அருகே வேளாங்கண்ணி தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக நிர்வாகியை பிடிக்க உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.