என்றும் நம் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர்!… டி.எம்.எஸ் பிறந்தநாள்(மார்ச்-24)…!!!!

டி.எம்.எஸ் தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற பாடகர் ஆவார். இன்று வரைக்கும் இவருக்கு ஈடு இணையான மற்றொரு பாடகர் தமிழ் திரையுலகில் இல்லை. குனிஞ்சு பாடக் கூடாது, கலைஞன்னா நிமிர்ந்து தான் பாடணும் என்று ஜி.ராமநாதன் கூறுவார். அந்த கட்டளையே அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார் டி.எம்.எஸ். வட நாட்டுக்கு ஒரு முகமது ரஃபி எனில் தென்னாட்டுக்கு டிஎம்எஸ். கர்நாடக பாடகர்கள் கூட சில நேரங்களில் ஸ்ருதி விலக்கக்கூடும். ஆனால் டிஎம்எஸ் எப்போதும் அதை செய்ய மாட்டார்.

கடந்த 1922 மார்ச் 24ல் மதுரையில் இசைப் பின்னணி இல்லாத (குஜராத்) செளராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தார் டிஎம்எஸ். இவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் கர்நாடக இசையை கற்றுக்கொண்டார். பி.யூ.சின்னப்பா, சுப்பையா பாகவதர் பாடல்களை கேட்டு வளர்ந்த டி.எம்.எஸ், தியாகராஜ பாகவதரின் பரம ரசிகர் ஆவார். இதன் காரணமாக தியாகராஜ பாகவதர் குரலில் மேடைக் கச்சேரிகளில் பாடி ஆரம்பத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.

ஒரு முறை தியாகராஜ பாகவதரின் பாடலை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த போது அதை கேட்டு பாகவதரே ஆச்சர்யப்பட்டு போய், நீ சென்னைக்கு வந்தால் வளமான எதிர்காலம் உண்டு என வாழ்த்தி உள்ளார். டிஎம்எஸ் தமிழில் மட்டும் 11,000 பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார். டிஎம்எஸ்-ன் மகத்துவமாக பார்க்கப்படுவது தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா பாடிய காலக்கட்டத்தில் பாட ஆரம்பித்து தனக்கென ஒரு பாணியையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கால் நூற்றாண்டு காலம் கொடி கட்டிப் பறந்தது. 91வது வயதில் கடந்த 2013 மே-25 அன்று காலமானார் டிஎம்எஸ்.