பகையில்லா மனிதன்…. எல்லோருக்கும் பிடித்த உத்தம முதல்வன் பின்பற்றிய 3 விஷயங்கள்….!!

தமிழக முதலமைச்சர்களின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் க.நா.அண்ணாதுரை. இவர் 1967 முதல் 1969 வரை யில் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணியாற்றினார். திராவிடத்தை தனது முழு மூச்சாக கொண்ட இவர் 1967இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றியை கண்டவுடனே இருமொழிக் கொள்கையை சட்டப்பூர்வமாக்கி மும்மொழிக் கொள்கையை புறக்கணித்தார். அதேபோல் மதராசப்பட்டினம் என்று பெயர் கொண்டிருந்ததை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் இது பலர் கூறி நாம் கேட்கவும் செய்து இருப்போம். ஆனால் அண்ணாவிடம் கற்றுக்கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். அவை  யாதெனில், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அறிஞர் அண்ணா அவரது ஆட்சிக் காலத்தில் மிக முக்கிய கொள்கையாக கொண்டு செயல்பட்டது இவற்றை தான்.

இவற்றையே கட்சியின் பண்பாடாக முன்னிறுத்தி அதை பின்பற்ற கோரி வலியுறுத்தினார். அதன்படி, கடமை கட்டுப்பாடு ஆகிய இரண்டும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒன்று எனவும், கண்ணியம் என்பது பொதுவாழ்வில் இருப்பவர்கள் சமுதாயத்தில் மக்களுக்கு நல்லது செய்ய எண்ணி அரசியலுக்குள் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் கண்ணியமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதாவது கண்ணியம் என்பது நாம் பிறருக்கு அளிக்கும் மதிப்பு மற்றும் மரியாதையை பொருத்தது.

நமக்கு எதிரே நிற்பவர்கள் வேறு கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பகைவராக இருந்தாலும் சரி எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகளாக இருந்தாலும் அவர்களை நண்பர்கள் போல் பாராட்ட வேண்டிய குணம் நம்மிடையே இருக்க வேண்டும். இது பொது வாழ்வில் நிற்கக் கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் தேவைப்படக்கூடிய பண்பாடாக இருக்கும்.

அறிஞர் அண்ணாவும் இறுதிவரை இதையே தனது வாழ்வில் பின்பற்றவும் செய்தார். உதாரணமாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை கடுமையாக விமர்சித்து பேசினர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த பலருக்கும் அப்போது அது கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அண்ணாவோ, மிகப் பொறுமையாக, கண்ணியமாக சிறப்பான பதில் ஒன்றை அளித்தார். 

“நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், விரைவில் நீங்களே அந்த குறையை போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.” வருங்கால ஆளும் கட்சி நாங்கள் தான் என்பதை கண்ணியத்துடன் தெரிவித்திருந்தார்.

இன்று திராவிட கழகத்தை சேர்ந்த நபர்களான பெரியார், கலைஞர் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் அனைவரும் பிற கட்சியினரால் தாறுமாறாக இன்றளவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் பேரறிஞர் அண்ணா அதற்கு விதிவிலக்கு. அவர் திராவிட கட்சிகளுக்கு மட்டும் பிடித்தவர் அல்ல, பிற கட்சியினரும் கூட அவரை இகழ்ந்து பேச தயங்கி வருகின்றனர். அதற்கு காரணம் எதிரியையும் மதித்துப் போற்றக்கூடிய அண்ணாவின் அந்தப் அன்புதான். இதே போல நாமும் அண்ணாவின் பண்புகளை பின்பற்றி நடந்தால், நமக்கு வாழ்வில் எதிரிகளே இருக்கமாட்டார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *