தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே திசையில் நகர்ந்து வருகிற 11-ம் தேதி அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் வருகிற 11-ம் தேதி முதல் கனமழை பெய்ய ஆரம்பிக்கும் என்று தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 11ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 12ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.