பாக்கெட் சாராயம் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சாராயம் கடத்தல் நடைபெற்று வருகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு நாகை காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் பாக்கெட் சாராயம் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் ஸ்கூட்டரில் வந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல் பகுதியை சேர்ந்த ஜீவா என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜீவாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த சாராயங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.