தமிழக மக்களிடத்தில் அதிமுக செல்வாக்கு என்றும் சரிவை சந்தித்ததில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுவதை எதிர்த்து திமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமாகும் அதனால் மத்திய அரசு அதனை செயல்படுத்த உத்தரவிட்டால் தமிழக அரசு உரிய முறையில் செயல்படுத்தும் என்று உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்கள் வைத்திருக்கும் திமுக மத்திய அரசிடம் வாதாடி பெற்றுத்தர வேண்டும், அது திமுக கடமை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களவை தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கூறி திமுகவினர் வெற்றி பெற்றுருக்கிறீர்கள் என முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து திமுக மக்களை ஏமாற்றியுள்ளது. இடைத்தேர்தலில் மக்கள் எங்களை புரிந்துகொண்டு வெற்றி பெற வைத்தார்கள். தமிழக மக்களிடம் எங்கள் செல்வாக்கு என்றும் சரிவை சந்தித்ததில்லை சரிவு என்பது அதிமுகவுக்கு இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.