சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…..!!

நாடாளுமன்ற தேர்தல் ப‌ண‌ப்‌புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து  உ‌யர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக தேர்தல் அதிகாரிகளும் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் தமிழகம் வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர்கள் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு குறித்தும் ,  சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் சென்னையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மக்களவை தேர்தலில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து காவல்துறை உ‌யர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொள்ளுகின்றனர்.


ஏற்கனவே நேற்றைய தினம் இவர்கள் தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட‌ அ‌ரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா‌ளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன்‌‌ உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இதில் தமிழகத்தில் தேர்தலையொட்டி அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், ‌ப‌ண‌ப்‌புழக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்க இருக்கின்றனர்.