“இலங்கை குண்டு வெடிப்புக்கு அதிமுக கண்டனம் “அறிக்கை வெளியிட்ட இபிஎஸ்,ஓபிஎஸ்!!..

மனிதாபிமானமற்ற முறையில் சிறிதும் இரக்கம் பாராமல் இலங்கையில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக  அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடபட்டுள்ளது.

இலங்கையின் தலைநகரான கொழும்புவில்  அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடித்தது . அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இலங்கையில் புனித ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்களில் இரக்கமற்ற முறையில் கொடூரமாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழ் கிறிஸ்துவ மக்கள் பெரும்பான்மையாக வழிபடும் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.